பட்ஜெட்டில் டீசல் கார் மீது வரி உயர்த்தினால் வியாபாரம் பாதிக்கும்: ஜிஎம்

பெட்ரோல் விலை விண்ணை முட்டி வருவதால், தற்போது டீசல் கார்களின் விற்பனை சூடு பறக்கிறது. இந்த நிலையில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில், டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு பல முன்னணி கார் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவி்த்து வருகின்றன.
டீசல் கார் உற்பத்திக்காக இந்தியாவில் செய்ய திட்டமிட்டுள்ள முதலீடுகளையும் நிறுத்தப் போவதாக மிரட்டி வருகின்றன. இந்த நிலையில், டீசல் கார் மீது கூடுதல் வரி விதிப்புக்கு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் நேரடியாக மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் லோவல் பேடாக் கூறுகையில்," சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதை கடுமையாக குறைக்கும் தொழில்நுட்பங்களுடன் இப்போது டீசல் கார்கள் வருகின்றன.
எனவே, டீசல் கார் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தரவேண்டும். அதை விடுத்து டீசல் கார்கள் மீது அதிக வரி விதிப்பது ஏற்புடையதாக இருக்காது. எங்களது கார் விற்பனையும் கடுமையாக பாதிக்கும்,"என்றார்.


Click it and Unblock the Notifications








