அச்சு அசல் எர்டிகா போல புதிய எம்பிவி காரை களமிறக்கும் செவர்லே!

காம்பெக்ட் எம்பிவி என்ற செக்மென்ட்டில் தற்போது நிலை நிறுத்தப்பட்டிருக்கும் எர்டிகாவுக்கு சொல்லப்போனால் தற்போது போட்டியே இல்லை எனலாம். மஹிந்திரா ஸைலோ, செவர்லே தவேரா, டொயோட்டோ இன்னோவா என அனைத்துமே வர்த்தக மார்க்கெட்டை அடிப்படையாக வைத்தே வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், எர்டிகாவுக்கு தனிநபர் மற்றும் குடும்ப காராக ஏற்றுக் கொள்ளும் அம்சங்கள் இருக்கிறது.
எனவேதான், எர்டிகா முன்பதிவும் மாருதிக்கு கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டி வருகிறது. ஆம், எர்டிகா முன்பதிவு இதுவரை 40,000 தாண்டிவிட்டதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், எர்டிகாவின் வெற்றியை பார்த்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், பார்ப்பதற்கும், ஒப்பிடுவதற்கும் ஏற்ற வகையில் எர்டிகாவின் நேரடி போட்டியாளரை செவர்லே பிராண்டில் இந்தியாவில் களமிறக்கிவிட திட்டமிட்டுள்ளது.
ஸ்பின் என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய காம்பெக்ட் எம்பிவி கார் வடிவமைப்பில் அச்சு அசல் எர்டிகா போன்றே இருப்பதால், சரியான போட்டியாளர் என்று எளிதாக கூறிவிடலாம். எர்டிகாவை போன்றே 7 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும் இந்த புதிய செவர்லே காம்பெக்ட் எம்பிவி தற்போது பிரேசிலில் சாலை சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
செவர்லே 'ஸ்பின்'னில் எர்டிகா க்ளீன் போல்டாகுமா?... பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








