எலக்ட்ரிக் கார் ஊக்குவிப்பு திட்டத்துக்கு 23,000 கோடி ஒதுக்கீடு!

சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையிலும், எரிபொருள் தேவையை குறைக்கவும் எலக்ட்ரிக் வாகன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் வாங்குவதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மானியம் வழங்கும் திட்டம் கடந்த மார்ச் மாதத்துடன் காலாவதியானது. இதனால், எலக்ட்ரிக் வாகன விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களாக எலக்ட்ரிக் வாகனங்களே விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார் மற்றும் பைக் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் திட்டத்துக்காக 23,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடுத்த 8 ஆண்டுகளுக்கு இந்த தொகை பல்வேறு நோக்கங்களுக்கு செலவிடப்படும்.
எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்கவும், சார்ஜிங் பாயிண்ட் அமைத்தல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதவும் இந்த தொகை செலவிடப்படும். பொதுவான ஆராய்ச்சி மற்றும் இதர மேம்பாட்டு பணிகளுக்கும் இந்த தொகை பயன்படுத்தப்பட உள்ளது.
வரும் 2020ம் ஆண்டில் ஆண்டுக்கு 60 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு வைத்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும், ஆட்டோமொபைல் துறையினரும் வரவேற்றுள்ளனர். அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த தொலைநோக்கு திட்டம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








