நாடு முழுவதும் ஒரே மாதிரியான வாகன வரி: மத்திய அரசு திட்டம்

வாகனங்களுக்கான வரி வசூலிக்கும் அதிகாரம் தற்போது மாநிலங்கள் கையில் உள்ளது. இதனால், வாகனங்களுக்கான வரி விதிப்பு முறை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. சில மாநிலங்களில 2 சதவீதம் முதல் சில மாநிலங்களில் 18 சதவீதம் வரை சாலை வரி விதிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றன.
மேலும், சில மாநிலங்களில் ஆயுட்கால சாலை வரியும், சில மாநிலங்களில் ஆண்டு்க்கொரு முறை சாலை வரி வசூலிக்கும் நடைமுறையும் உள்ளது. டெல்லியில் வாகனம் வாங்கும்போது சாலை வரியுடன் பார்க்கிங் வரியும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இதனால், வாகன உரிமையாளர்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தமிழகத்தை விட பாண்டிச்சேரியில் வாகன வரி மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது. அதேவேளை, கர்நாடகத்தில் வாகன அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வாகன உரிமையாளர்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
ஒரு மாநிலத்தில் பணி மற்றும் இதர வேலைகளுக்காக அண்டை மாநிலத்திற்கு சென்று வாகனத்தை பயன்படுத்தும்போது அந்த மாநிலத்தில் கூடுதல் சாலை வரி நடைமுறையில் இருந்தால் அதை செலுத்தினால்தான் அங்கு வாகனத்தை ஓட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது.
இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதத்தில், நாடு முழுவதும் சீரான சாலை வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சி.பி.ஜோஷி கூறியதாவது:
"மோட்டார் வாகன வரி விதிப்பு முறையில் உடனடி மாற்றம் கொண்டு வரவேண்டிய அவசியம் இருக்கிறது. இதில், ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. இதை களைந்து புதிய வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். எனவே, கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் எக்ஸ்ஷோரூம் விலையில் 6 சதவீதம் வரி விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
இதனிடையே, இந்த புதிய வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தால், 6 சதவீதத்திற்கும் குறைவாக மாநிலங்கள் வரி விதிக்க முடியாது. அதேவேளை, குறிப்பிட்ட வாகனங்களுக்கோ அல்லது அனைத்து வாகனங்களுக்கும் வேண்டுமானால் மாநிலங்கள் தேவைக்கேற்ப கூடுதல் வரி விதிக்க வழி வகை இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








