எலக்ட்ரிக் கார் விற்பனையை ஊக்குவிக்க ரூ.13,000 கோடியில் மெகா திட்டம்!

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கான திட்ட வரைவு ஒன்றை மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் வகுத்து வருகிறது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த புதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அடுத்த 8 ஆண்டுகளில் ரூ.13,000 கோடியை செலவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பிரத்யேக அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த புதிய திட்டத்தின் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் எரிபொருளுக்காக மத்திய அரசு மானியமாக வழங்க வேண்டிய ரூ. 27,000 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் கார் வாங்குவோருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய கடன் கிடைக்க வழி வகை செய்யப்பட உள்ளது. மேலும், எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு வரிச் சலுகையும் வழங்கப்படும்.
இது தவிர, எலக்ட்ரிக் கார் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அனைத்து கார் நிறுவனங்களுக்கும் பொதுவான ஆய்வகத்தை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், எலக்ட்ரிக் கார் வடிவமைப்புக்கான செலவு கணிசமாக குறையும் என்று மத்திய கனரக தொழிற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








