டெல்லியில் சூப்பர் கார் விபத்து: இளம் தொழிலதிபர் பரிதாப பலி

டெல்லியில் சூப்பர் கார் விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோன்று, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அதிவேகமாக வந்த லம்போர்கினி சூப்பர் கார் சாலை தடுப்பின் மீது மோதி சுக்கு நூறானது. இதில், தொழிலதிபர் மகன் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், டெல்லியில் நேற்று நடந்த மற்றொரு சூப்பர் கார் விபத்து டெல்லி வாசிகள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த எம்விஎல் நிறுவனத்தின் இயக்குனர் அனுக்குல் ரிஷி(28). இளம் தொழிலதிபரான இவர் நேற்று கான்பூரிலிருந்து டெல்லிக்கு தனது லம்போர்கினி சூப்பர் காரில் வந்துகொண்டிருந்தார். தெற்கு டெல்லியி்ல் அதிகாலை 5.30 மணியளவில் வந்தபோது வாகனம் ஒன்றை ரிஷி ஓவர்டேக் செய்ய முயன்றுள்ளார்.
அப்போது, சாலை ஓரத்தில் இருந்த தடுப்புகளின் மீது மோதிய அந்த கார் நிலை தடுமாறி அவ்வழியே சென்ற சைக்கிள் மீது மோதி அந்த சூப்பர் கார் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும், சாலை ஓரம் இருந்த கம்பம் ஒன்றில் படு பயங்கரமாக மோதியது.
அப்போது காருக்குள் இருந்து ரிஷி வெளியே தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அவ்வழியே வந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும், அனுக்குல் ரிஷியின் அதிவேக விளையாட்டில் சிக்கிய சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுக்குல் ரிஷி 180 கிமீ வேகத்தில் காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அனுக்குல் சீட் பெல்ட் அணியாமல் வந்ததால்தான், காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு ரிஷி இறந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்தாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் பலியான இளம் தொழிலதிபர் அனுக்குல் ருஷிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.3 கோடி மதிப்புடைய அவரது லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்ட கார். வெறும் 3.9 நொடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று வெறும் 5 நொடிகளுக்குள் 100 கிமீ வேகத்தை எட்டக்கூடிய இதுபோன்ற சூப்பர் கார்களை மது அருந்திய நிலையில் ஓட்டும்போது கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் என்று ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








