5 ஆண்டுகளில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள்: ஹோண்டா இலக்கு

மாருதி கார் நிறுவனத்துக்கு அடுத்து மார்க்கெட்டில், ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா பிராண்டுக்குத்தான் அதிக மதிப்பு இருக்கிறது. தரமான கார்களை தயாரித்து வழங்கினாலும், அந்த நிறுவனம் பெட்ரோல் கார்களை மட்டுமே வைத்துக் கொண்டு தற்போது அவஸ்தைபட்டு கொண்டிருக்கிறது.
இதனால், எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை எட்ட முடியாமல் தவித்து வருகிறது. அடுத்த ஆண்டுதான் தனது முதலாவது டீசல் காரை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதுவும் சிவிக் காரில் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரிய அளவில் ஆவலை ஏற்படுத்தவில்லை.
இதனிடையே, வரும் தீபாவளி பண்டிகையின்போது பிரியோ டீசலை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாக ஒரு யூகத் தகவல் தற்போது ஆட்டோமொபைல் இணையதளங்களை உலா வருகிறது. ஆனால், அதில் எந்த எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்பது குறித்த பிற முக்கிய தகவல்கள் இல்லாமல் அந்த செய்தி காட்டுத் தீப்போல பரவி வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய மார்க்கெட்டில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை பெறுவதை இலக்காக கொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. டீசல் கார்களை அதிக அளவில் ஹோண்டா அறிமுகம் செய்தால் மட்டுமே இந்த இலக்கை இலகுவாக ஹோண்டாவால் எட்ட முடியும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








