ரூ.9.03 லட்சத்தில் புதிய ஹோண்டா சிட்டி சிஎன்ஜி மாடல் அறிமுகம்

மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் சிறந்த கார் மாடலாக ஹோண்டா சிட்டி விளங்குகிறது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்னர் வரை சிட்டி மிட்சைஸ் கார் மார்க்கெட்டில் முதல் இடத்தில் இருந்தது.
ஆனால், பெட்ரோல் மாடலில் மட்டும் கிடைப்பதால் விற்பனையில் தொடர்ந்து பின்தங்கி வருகிறது. டீசல் மாடலை உடனடியாக களமிறக்கும் வாய்ப்பும் ஹோண்டாவிடம் இல்லை.
இந்த நிலையில், விற்பனை சரிவை தவிர்ப்பதற்காக தற்போது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில்(சிஎன்ஜி) இயங்கும் சிட்டி கார் மாடலை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறது. நாடு முழுவதும் 28 நகரங்களில் உள்ள 45 ஹோண்டா டீலர்ஷிப்புகளில் சிஎன்ஜி மாடல் சிட்டி விற்பனைக்கு கிடைக்கும்.
வி வேரியண்ட்டில் மட்டும் சிஎன்ஜி சிலிண்டர் கிட் பொருத்தப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டு வரும் புதிய சிட்டி காரின் சஸ்பென்ஷனில் சில மாறுதல்களை ஹோண்டா செய்துள்ளது. மேலும், சிஎன்ஜி சிட்டி காருக்கு 2 ஆண்டுகள் வாரண்டியை ஹோண்டா அறிவித்துள்ளது.
இதுதவிர, பழைய வாடிக்கையாளர்களும் தங்களது சிட்டி காரில் சிஎன்ஜி கிட்டை தனியாக வாங்கி பொருத்திக் கொள்ள முடியும். ரூ.50,200 விலையில் சிஎன்ஜி சிலிண்டர் கிட்டை டீலர்களில் வாங்கி பொருத்திக்கொள்ளலாம். ஆனால், பொருத்துவதற்கு தனி கட்டணத்தை செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications








