சிவிக் கார் உற்பத்தியை நிறுத்திய ஹோண்டா: காரணம் என்ன?

கடந்த 2006ம் ஆண்டு சிவிக் செடான் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்திய ஹோண்டா. அசத்தலான வடிவமைப்பு, நல்ல பெர்ஃப்ராமென்ஸ் கொண்ட எஞ்சின் ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
மேலும், 2007ம் ஆண்டு மார்ச்சில் அதிகபட்சமாக 2546 சிவிக் கார்கள் விற்பனையானது. ஹோண்டாவின் விற்பனையிலும் முக்கிய பங்களிப்பை கொடுத்து வந்தது. இந்த நிலையில், டி செக்மென்ட்டில் பல புதிய வரவுகளால் பெரும் நெருக்கடிக்குள்ளானது சிவிக்.
மேலும், பெட்ரோல் மாடலில் மட்டுமே சிவிக் விற்பனையானதும் முக்கிய காரணம். டீசல் மாடல் இல்லாததால், சிவிக் கார் பக்கம் வாடிக்கையாளர்கள் தலைவைத்து கூட படுக்கவில்லை.
இதனால், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆண்டு காலாண்டு விற்பனை நிலவரத்தின்படி, மொத்தமாகவே 50 சிவிக் கார்கள் மட்டுமே விற்பனையாகியது. இதனால், ஹோண்டாவின் மொத்த விற்பனையும் சரிவு ஏற்பட்டு வந்தது.
இதற்கடுத்து, ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் சிவிக் விலையை ரூ.2 லட்சம் வரை அதிகரிக்க வேண்டிய நிலைக்கு ஹோண்டா தள்ளப்பட்டது. இவற்றையெல்லாம் கணக்கு போட்டு பார்த்த ஹோண்டா சிவிக் விற்பனையை உடனடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
புதிய சிவிக் காரை அறிமுகப்படுத்தினாலும், டீசல் மாடல் வருவதற்கு அதிக காலம் பிடிக்கும் நிலை இருக்கிறது. புதிய மாடலும் பெட்ரோலில் மட்டும் விற்பனைக்கு வந்தால், அது எந்தளவு எடுபடும் என்பதை ஹோண்டா கணித்து விட்டது. இதனால், புதிய சிவிக் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் ஹோண்டா கைவிட்டுள்ளது.
இதுபோன்று, பல விதங்களில் சிவிக் காரை தொடர்ந்து இந்திய மார்க்கெட்டில் வைத்துக் கொள்ள முடியாத நிலை உருவாகியதையடுத்து, அந்த காரின் உற்பத்தியை ஹோண்டா நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டீலர்களில் இருப்பு உள்ள சிவிக் கார்கள் விற்பனையானவுடன் இதற்கான முறைப்படி அறிவிப்பை ஹோண்டா வெளியிடும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








