பாதுகாப்பாக கார் ஓட்டுவதில் பெண்கள்தான் சமர்த்தாம்

கார் ஓட்டுவதில் ஆண்கள்தான் சிறப்பாக செயல்படுவதாகவும், இது ஆண்களுக்கான வேலை என்கிற மனப்போக்கும் காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் கார் ஓட்டுவதில் கில்லாடியாகி வருகின்றனர்.
பாதுகாப்பான டிரைவிங் என்ற விஷயத்தில் யார் சிறப்பாக செயல்படுகின்றனர் என்பது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.இதில், பாதுகாப்பாக கார் ஓட்டுவதில் ஆண்களைவிட பெண்கள்தான் கவனமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்கள் தேவையில்லாமல் முறுக்கேற்றிக்கொண்டு ஓவர்டேக் செய்யும்போது அனாவசியமாக ரிஸ்க் எடுக்கின்றனராம்.அதேவேளை, பெண்கள் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக கார் ஓட்டுகிறார்களாம். மேலும், பிற வாகனங்களுடன் போட்டி போட மாட்டார்களாம் பெண்கள்.
ஆனால், தன் காரை முந்தி செல்ல ஏதாவது ஒரு வாகனம் வருவது தெரிந்துவிட்டால் ஆண்களுக்கு என்ன ஆகுமோ தெரியவில்லை. பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் காரை விரட்டுவதிலேயே கவனம் செலுத்துவார்களாம் ஆண்கள். பெண்கள் இப்படி இல்லை என்கிறது ஆய்வு.
போக்குவரத்து நெரிசலில் கூட விதிகளை அனுசரித்து செல்வதில் பெண்களுக்குத்தான் இந்த ஆய்வில் முதலிடம். டிரைவிங்கின்போது மிக மிக கவனமாக அரட்டை அடிக்காமல் செல்கிறார்கள் பெண்கள் என்று நீள்கிறது இந்த ஆய்வு. டிரைவிங்கில் பெண்கள் மோசம் என்கிற மனப்போக்கு இந்த ஆய்வின் மூலம் தகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்து, முறையாக டிரைவிங் செய்தால் போதும். கார் டிரைவிங்கில் பாலின வேறுபாடு ஒரு காரணமாகவும், குறையாகவும் இருக்காது என்பதே நமது கருத்து.


Click it and Unblock the Notifications








