ஐ10 காருக்கு புதிய 1.1 லிட்டர் டீசல் எஞ்சின்: ஹூண்டாய் மும்முரம்?

கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் கார்களில் டீசல் மாடல்கள் இல்லை. இதனால், விற்பனையில் சிறிதளவு அந்த நிறுவனத்துக்கு பின்னடைவு இருக்கிறது.
எனவே, இந்தியாவில் புதிய டீசல் எஞ்சின் தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. ஆனால், பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக அந்த திட்டத்தை கிடப்பில் போட்டது.
தற்போது பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படாததால், தனது டீசல் எஞ்சின் ஆலை திட்டத்தை விரைவுப்படுத்த ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
ரூ.500 கோடியில் புதிய டீசல் எஞ்சின் ஆலையை கட்ட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 1.5 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
1.1 லிட்டர், 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின்களை இந்த ஆலையில் தயாரிக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இதில், 1.1 லிட்டர் எஞ்சின் ஐ10 காருக்கு பொருத்தப்படும்.
இதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் i20 காருக்கும், 1.6 லிட்டர் புதிய வெர்னாவுக்கும் பொருத்தப்படும். இந்த இரண்டு கார்களுக்கும் தற்போது இறக்குமதி செய்து டீசல் எஞ்சின்களை ஹூண்டாய் பொருத்தி வருகிறது.
மேலும், 1.1 லிட்டர் எஞ்சினை வடிவமைக்கும் பணிகளையும் ஹூண்டாய் தற்போது துவக்கிவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், புதிய டீசல் எஞ்சின் ஆலை மற்றும் இதர விபரங்களை அடுத்த மாதம் ஹூண்டாய் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








