நேபாளத்திற்கு இயானை ஏற்றுமதி செய்யும் ஹூண்டாய்

கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக திகழ்கிறது.
இந்த நிலையில், இந்தியா தவிர்த்து இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் தங்களது வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அந்த நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது.
இதன் ஒரு படியாக, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தனது சிறிய கார் இயானை நேபாளத்தில் விரைவில் அறிமுகம் செய்கிறது ஹூண்டாய்.
கடந்த ஆண்டு நானோ காரையும், சமீபத்தில் இண்டிகா வி்ஸ்டா காரையும் நேபாளத்தில் அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ். இதைத்தொடர்ந்து, தற்போது ஹூண்டாய் நிறுவனமும் இயான் காரை நேபாளத்தில் அறிமுகம் செய்கிறது.
நேபாளத்தில் இயானை இறக்குமதி செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக லட்சுமி இன்டர்நேஷனலை ஹூண்டாய் மோட்டார்ஸ் நியமித்துள்ளது.
இயான் டி-லைட், டி-லைட் ப்ளஸ், எரா ப்ளஸ், ஸ்போர்ட்ஸ் ஆகிய 4 வேரியண்ட்கள் நேபாளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் ரூ.2.69 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் இயான் நேபாளத்தில் குறைந்த விலை கார் என்று சட்டென்று கூறிவிட முடியாது. ஆம், அங்கு இறக்குமதி வரி அதிகம் என்பதால் ரூ.9.42 லட்சம் ஆரம்ப விலையில் இயான் விற்பனை செய்யப்பட உள்ளது.
நேபாளத்தில் மாருதி ஆல்ட்டோ, செவர்லே க்யூக்யூ3, பெரோதுவா விவா ஆகிய கார்களுக்கு இயான் கடும் மார்க்கெட் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








