பெட்ரோல் விலை உயர்வு: கார் மார்க்கெட்டுக்கு பாதிப்பு

பெட்ரோல் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோரின் மாத பட்ஜெட்டில் இந்த விலை உயர்வு கண்டிப்பாக பெரிய சிரமத்தை ஏற்படுத்தும். அன்றாடம் மொபட்டில் சென்று வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த விலை உயர்வு தலையில் இடியை இறக்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில் கார் விலை உயர்த்தப்பட்டதால், கடந்த மாதம் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அதிகம் விற்பனையாகும் சிறிய கார் மார்க்கெட்டில் பெரும்பான்மையானவை பெட்ரோல் மாடல்களே என்பதால் விற்பனை கணிசமாக சரிந்தது.
மாதத்திற்கு 25,000 முதல் 30,000க்கும் மேல் விற்பனையாகும் சிறிய காரான ஆல்ட்டோவின் விற்பனை தடந்த மாதம் முதன்முறையாக 18,000 என்ற அளவுக்கு சரிந்தது. ஆல்ட்டோ உள்பட டீசல் மாடல் இல்லாத அனைத்து சிறிய கார்களின் விற்பனையும் படுத்துக்கொண்டுள்ளது.
இதற்கு நேர் மாறாக டீசல் கார் விற்பனை சூடுபிடித்துள்ளது. 5 அல்ல 8 அல்ல எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருந்து டீசல் கார்களை வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். அந்தளவுக்கு பெட்ரோல் விலை உயர்வு அவர்களை பாதித்திருக்கிறது. வரும் மாதங்களில் பெட்ரோல் கார் விற்பனை பெரிய சரிவை சந்திப்பது உறுதி.
இத்தோடு நில்லாமல், டீசல் விலையையும் உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், டீசல் மானியத்தை நிறுத்துவது குறித்தும் பரிசீலித்து வருகிறது. டீசல் மானியத்தையும் குறைத்து விட்டால் கண்டிப்பாக கார் விற்பனை படுபாதாளத்திற்கு செல்லும்.
தினசரி அலவலகம் செல்ல கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கு முற்படலாம். ஆனால், அங்கேயும் பெட்ரோல் விலைதான் பிரச்னையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








