பட்ஜெட் எஃபெக்ட்: இறக்குமதி கார்களின் விலை ரூ.70 லட்சம் வரை உயர்ந்தது
மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி கார்கள் மீதான சுங்க வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 60 சதவீதமாக இருந்த இறக்குமதி சுங்க வரி தற்போது 75 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, அதிக விலை கொண்ட ஃபெராரி, பென்ட்லீ, லம்போர்கினி, போர்ஷே, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட கார்களின் விலை எகிடுதகிடாக அதிகரித்துள்ளது.
பட்ஜெட்டில் வரி விதிப்பை தொடர்ந்து வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தங்களது இறக்குமதி கார்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. இதனால், தற்போது இறக்குமதி கார்களின் விலை ரூ.20 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
இதுவரை ரூ.2.20 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஃபெராரி கலிபோர்னியா காரின் விலை தற்போது ரூ.2.69 கோடியாக அதிகரித்துள்ளது. அந்த நிறுவனத்தின் மற்றொரு மாடலான எப்எப் காரின் விலை ரூ.3.42 கோடியிலிருந்து ரூ.4.12 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த காரின் விலை திடீரென ரூ.70 லட்சம் வரை அதிகரித்துள்ளது. இதேபோன்று, பிரிட்டிஷ் பிரிமியம் கார் தயாரிப்பாளரான அஸ்டன் மார்ட்டின் தனது கார்களின் விலையை ரூ.20 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை அதகரித்துள்ளது.
பட்ஜெட்டில் கணிசமாக வரி விதிப்பால் ஆடம்பர மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பன்னாட்டு கார் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இறக்குமதி கார்களின் மீதான கூடுதல் வரிக்கு ஆட்டோமொபைல் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், இந்தியாவில் கார் தயாரிப்பு அதிகரிக்கும் என்பதால் முதலீடு, வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வழிகோலியுள்ளதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications









