அபுதாபி பரிசுபோட்டியில் லம்போர்கினி சூப்பர் கார் வென்ற இந்தியர்

அபுதாபியில் டெலிவிரி வேன் டிரைவராக வேலை பார்த்து வருபவர் சூபி அப்துல்லா(44). இவர் அங்குள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் பொருட்கள் வாங்கச் சென்றார். அப்போது அந்த வணிக வளாகத்தில் பரிசுப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், பொருட்களை வாங்குவோருக்கு சூப்பர் கார் உள்பட ஏராளமான பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், குறைந்தது 250 திராம்ஸுக்கு பொருட்களை வாங்க வேண்டும் எனவே, 250 திராம்ஸுக்கு பொருட்களை வாங்கினார் அப்துல்லா. இதற்காக அவருக்கு பரிசுக் கூப்பன் ஒன்று வழங்கப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த இதற்கான குலுக்கலில் அப்துல்லாவுக்கு முதல் பரிசான லம்போர்கினி சூப்பர் கார் அவரது கூப்பனுக்கு விழுந்தது.
இதுகுறி்த்து அப்துல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் அவரிடம் பரிசாக வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த குலுக்கலில் முதல் பரிசு கிடைக்கும் என கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னிடம் பழைய ஸ்கூட்டர்தான் இருக்கிறது. எனக்கு இது மிகப் பெரிய பரிசுதான். சூப்பர் கார் பரிசாக கிடைத்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
பரிசாக கிடைத்த லம்போர்கினி கல்லார்டோ காரை விற்று விட முடிவு செய்துள்ளேன். அந்த பணத்தில் கேரளாவில் உள்ள எனது சொந்த ஊரில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். எனது குடும்பதுக்கு மட்டுமில்லாமல், இரண்டு சகோதரர்களுக்கும் சேர்த்து வீடு கட்டுவேன்.
மீதமுள்ள பணத்தில் கடன் பிரச்னைகளை ஒழிப்பேன். இதில் பெரும்பாலான தொகையை எனது சொந்த ஊரில் உள்ள பள்ளிவாசலுக்கு நன்கொடையாக வழங்க உள்ளேன், " என்றார்.
அப்துல்லாவுக்கு பரிசாக கிடைத்த லம்போர்கினி சூப்பர் காரில் அதிக திறன் கொண்ட வி10 எஞ்சின் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த கார் இந்தியாவில் ரூ.2 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








