கார் ரிப்பேர் கட்டணத்தை குறைக்க காப்பீட்டு நிறுவனங்கள் வலியுறுத்தல்

மருத்துவமனைகளில் இதுபோன்று அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை குறைத்துக்கொள்ளுமாறு, காப்பீ்ட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. இதைத்தொடர்ந்து தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளன காப்பீட்டு நிறுவனங்கள்.
கார் பழுது நீக்குவதற்கான கட்டணம் மற்றும் உதிரிபாகங்களின் விலையை எக்கச்சக்கமாக போட்டு தாக்குவதால், தங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, அதிக பிரிமியம் தொகையை நிர்ணயிக்க வேண்டியிருப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதனால், தங்களக்கு மட்டுமின்றி வாடிக்கையாளர் தலையிலும் கூடுதல் பிரிமியம் சுமையை சுமத்த வேண்டியிருப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, முன்னணி கார் நிறுவனங்களுடன் காப்பீட்டு நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் தற்போது தனது காப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது. கார்களில் சில சிறிய உதிரிபாகங்களை மாற்றுவதற்கு பதில், மொத்த பாகத்தையே மாற்றுவதால் கூடுதல் செலவை ஏற்க வேண்டியிருப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உதாரணத்திற்கு, ஹெட்லைட்டில் உள்ள சில மிக விலைக்குறைந்த பாகங்களை மாற்றுவதற்கு பதில், மொத்த ஹெட்லைட் செட்டையே மாற்றும் வகையில், தற்போது உதிரிபாகங்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இதை தவிர்த்து சைல்டு ஸ்பேர்ட் பார்ட்ஸ் என்று கூறப்படும், துணை பாகங்களை தயாரித்து கொடுக்குமாறு கார் நிறுவனங்களை காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
இதனால், பழுது நீக்கும் செலவு வெகுவாக மிச்சமாகும். தவிர, பேஸ் வேரியண்ட் கார்களிலும் திருட்டை கண்டுபிடிக்கும் ஜிபிஎஸ் கருவியை பொருத்தும் வசதியை ஏற்படுத்தி தரவும், நசுங்கிய பாகங்களை டென்ட் எடுப்பதற்கு அதிநவீன கருவிகளை சர்வீஸ் சென்டர்களில் பொருத்த வேண்டும் என்றும் கார் நிறுவனங்களை காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








