அதிக மைலேஜ் தரும் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்கும் டாடா
அடுத்த இரு ஆண்டுகளில் ஜாகுவார் லேண்ட் ரோவர்(ஜேஎல்ஆர்) பிராண்டில் அதிக மைலேஜ் தரும் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் தற்போது டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் வருவாயில் ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்டுகள் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.

இதனால், அந்த பிராண்டுகளின் வளர்ச்சிக்காக பெரும் முதலீட்டை டாடா மோட்டார்ஸ் செய்து வருகிறது. இந்த நிலையில், ஸ்போர்ட்ஸ் கார் தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தவும் டாடா முடிவு செய்துள்ளது.
ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றால் மைலேஜை பற்றி பேசுவதற்கு இடம் கிடையாது.ஆனால், அதை தகர்த்து சாதாரண கார்கள் போன்று அதிக மைலேஜ் தரக்கூடிய ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமி்ட்டுள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா குறிப்பிடுகையில்,"அடுத்த இரு ஆண்டுகளுக்குள் அதிக மைலேஜ் தரக்கூடிய பல புதிய மாடல் ஸ்போர்ட்ஸ் கார்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
இதற்காக, அதிக மைலேஜ் கொடுக்கும் அதிக திறன் கொண்ட எஞ்சினை தயாரிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இது ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் முன்னோடி தொழில்நுட்பமாக இருக்கும்," என்றார்.
அதேவேளை, புதிய மாடல்கள் குறித்த விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 40 புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களை அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து 2008ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications