சாலை பாதுகாப்பு: புனே போலீசாரின் 'கொலவெறி' பிரச்சாரம்!

தனுஷின் கொலவெறி பாடல் ஒருபக்கம் சர்ச்சையை கிளப்பி வந்தாலும், மறுபுறம் அந்த பாடலுக்கு மவுசு குறைந்தபாடில்லை. எங்கு பார்த்தாலும் கொலவெறி ஆதிக்கம் நீக்கமற நிறைந்துவிட்டது என்று கூறும் அளவுக்கு அந்த பாடல் பிரபலமாகியுள்ளது.
உத்தரபிரதேசத்தில், சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களை கவர காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் கூட கொலவெறியுடன் இந்த பாடலின் உல்ட்டா பாடலை வைத்து வாக்காளர்களை கவர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், கொலெவெறி பாடல் மற்றுமொரு அவதாரம் எடுத்துள்ளது. கொலவெறியின் உல்ட்டா பாடலை தயாரித்து, சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை புனே போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
'ஸ்லோ ஸ்லோ காடி ஸ்லோ' என்று துவங்கும் அந்த பாடலில் வரிகள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்து விதிகளை எளிமையாக தெரிவி்க்கும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.
ஒய் திஸ் ஆக்ஸிடென்ட், டிராபிக் ஜாமிங், பொல்யூசன் ஜி?(விபத்து, டிராபிக் ஜாம், மாசுபடுத்துவது ஏன்?- என்று பொருள்படும்படி, அதே மெட்டில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்லோ, ஸ்லோ, காடி ஸ்லோ, காடி ஹாலு செல்லோ(வாகனத்தை மெதுவாக ஓட்டுங்கள்) என்றும், லவ் லவ் ஃலைப் லவ்(வாழ்க்கையை நேசியுங்கள்) என்று அடுத்தடுத்த வரிகள் இடம்பெற்றுள்ளன.
கேர்ஃபுல்லி டிரைவ்(கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்),திஸ் சாங் ஃபார் புனே சேப்(புனே பாதுகாப்புக்காக இந்த பாடல்),வீ டோண்ட் ஹேவ் நோ சாய்ஸ்(எங்களுக்கு வேறு வழியில்லை)என்று பொருள்படும்படி எதுகை மோனையுடன் வரிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த பாடல் மராட்டி, ஹிந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகளின் கலவையாக எழுதப்பட்டுள்ளது. மேலும், இந்த பாடலை வீடியோவாக தயாரிக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் இந்த உல்ட்டா கொலவெறி பாடல் ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்ய இருப்பதாகவும் புனே போலீசார் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








