100 கிமீ வேகத்தில் சென்ற கார் பல்டி: கல்லூரி மாணவர் சாவு; மாணவி கை துண்டிப்பு

டெல்லியில் அதிவேகத்தில் செல்லும் கார்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த மாதம் டெல்லியில் 180 கிமீ வேகத்தில் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அந்த காரை ஓட்டிச் சென்ற தொழிலதிபர் ஒருவர் பலியானார்.
மேலும், அந்த சூப்பர் கார் மோதியதில் சைக்கிளில் சென்றவரும் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், நேற்றுமுன்தினம் நடந்துள்ள மற்றொரு சம்பவம் டெல்லிவாசிகளை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த குர்ஜித் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் அங்குள்ள இண்டியா ப்ளேஸ் மால் என்ற வணிக வளாகத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்த்துவிட்டு, ஐஸ் க்ரீம் சாப்பிடுவதற்காக இண்டியா கேட் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
விகாஸ் மார்க் பகுதியில் ஐடிஓ மேம்பாலம் அருகே வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பிலிருந்து மின்கம்பத்தில் மோதி 4 முறை பல்டி அடித்துள்ளது. இதில், குர்ஜித்தின் நண்பர் சுப்மித் பிஸ்னோய்(22) என்பவர் பலியானார். இந்த விபத்தில் குர்ஜித்தின் தோழி நிகிதா(23)தனது இடது கையை இழந்துவிட்டார்.
தவிர, சுபம் என்ற குர்ஜித்தின் மற்றொரு நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போலீசார் குர்ஜித் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான கார் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் சென்றததால்தான் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக வழக்கை விசாரிக்கும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
டெல்லியில் இதுபோன்று அடிக்கடி நடந்து வரும் ஓவர் ஸ்பீடு கார் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








