நவீன வசதிகளுடன் மஹிந்திரா ரேவாவின் புதிய ஆலை திறப்பு!
நாட்டின் ஒரே எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா ரேவா தற்போது ரேவா ஐ என்ற இருவர் பயணம் செய்யும் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி ரேவா என்எக்ஸ்ஆர் என்ற புதிய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய உள்ளது.
4 பேர் பயணம் செய்யும் வசதிகொண்ட இந்த புதிய எலக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தனது உற்பத்தி திறனை அதிகரித்துக் கொள்ளும் விதமாக புதிய எலக்ட்ரிக் கார் ஆலையை மஹிந்திரா பெங்களூரில் அமைத்துள்ளது. 4.2 ஏக்கர் பரப்பளவில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நேற்று திறந்து வைத்தார். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை அம்சங்களுடன், நவீன வசதிகள் கொண்டதாக இந்த புதிய ஆலை கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலைக்கு தேவைப்படும் 35 சதவீத மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதிய காரை உடனுக்குடன் சோதனை செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் கார் ஆலையில் ஆண்டுக்கு 30,000 கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதனை படிப்படியாக அதிகரிக்கவும் மஹிந்திரா ரேவா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









