வரும் 25ந் தேதி புதிய வெரிட்டோவை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா
மாருதி டிசையர் போன்று நீளம் குறைக்கப்பட்ட புதிய வெரிட்டோ காரை வரும் 25ந் தேதி அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
காம்பெக்ட் செடான்(சிஎஸ்) என்ற புது ரகத்தில் செடான் கார்களின் நீளத்தை குறைத்து அறிமுகப்படுத்தும் டிரென்ட் உருவாக்கியுள்ளது. மாருதி நிறுவனம் டிசையர் காரின் நீளத்தை குறைத்து அறிமுகப்படுத்திய குட்டி டிசையர் கார் மார்க்கெட்டில் சக்கை போடு போடுகிறது.

இதேபோன்று, தற்போது வெரிட்டோவின் நீளத்தை குறைத்து மஹிந்திரா குட்டி வெரிட்டோவை வரும் 25ந் தேதி அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய கார் 4 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என்பதால் வரிச்சலுகை பெறும்.
இதனால், ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் வெரிட்டோவைவிட ரூ.40,000 குறைவான விலையில் புதிய வெரிட்டோ வருகிறது. நீளம் குறைக்கப்பட்ட போதிலும் குட்டி வெரிட்டோவில் 350லிட்டர் அளவுக்கு பூட் அறையை கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன.
வெரிட்டோ சிஎஸ் என்ற பெயரில் மார்க்கெட்டு்க்கு வரும் இந்த புதிய வெரிட்டோ காரில் 1.5 லிட்டர் டிசிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 65 பிஎச்பி ஆற்றலையும், 160 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
4 மீட்டருக்கும் குறைவாக இருந்தாலும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை கொண்டிருந்தால் மட்டுமே அரசின் வரிச்சலுகையை பெற முடியும். தற்போது மஹிந்திராவிடம் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இல்லை என்பதால் பெட்ரோல் மாடலில் குட்டி வெரிட்டோ கிடைக்காது என்று தெரிகிறது. புதிய வெரிட்டோ டீசல் லிட்டருக்கு 21.03 கிமீ மைலேஜை தரும் என்றும் மஹிந்திரா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி டிசையர் டீசல் மாடல் ரூ.5.91 லட்சம் முதல் ரூ.7.51 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வெரிட்டோ ரூ.5.78 லட்சம் முதல் ரூ.6.54 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








