தீபாவளிக்கு புதிய மினி ஸைலோவை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

அலுவலகம் மற்றும் இதர தினசரி தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில், மினி ஸைலோவை மஹிந்திரா வடிவமைத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே மினி ஸைலோவின் சோதனை ஓட்டங்களை அந்த நிறுவனம் தீவிரமாக நடத்தி வருகிறது.
கடந்த மாதம் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மினி ஸைலோ அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மினி ஸைலோவை மஹிந்திரா அறிமுகப்படுத்தவில்லை. இதனால், சிறு ஏமாற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 8ந் தேதி மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஸைலோ எம்பிவியை மஹி்ந்திரா அறிமுகம் செய்துள்ளது. அறிமுக விழாவில் மினி ஸைலோ குறித்து மஹிந்திராவின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு அதிகாரி அருண் மல்ஹோத்ராவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அவர், வரும் தீபாவளி பண்டிகையின்போது புதிய ஸைலோவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். அதேவேளே மினி ஸைலோ குறித்த தகவல்கள் எதையும் பகிர்ந்துகொள்ள அவர் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில், ஹேட்ச்பேக் கார் போன்று 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக வரும் புதிய ஸைலோவை ரூ.5 லட்சம் விலையில் அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








