எக்ஸ்யூவி500: குலுக்கலில் கிடைக்காதவர்களிடம் மஹிந்திரா ரகசிய புக்கிங்!
மஹிந்திராவே நினைத்து பாராத அளவுக்கு எக்ஸ்யூவி500வுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், திக்குமுக்காடி போன மஹிந்திரா உற்பத்தி திறனை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருப்பினும், டிமான்ட் அதிகரித்து வருவதால் அடுத்து என்ன செய்வது என்ற நிலையில் மஹிந்திரா இருந்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில் நடந்து முடிந்த எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கான இரண்டாம் கட்ட முன்பதிவில் லாட்டரி குலுக்கல் முறையை மஹிந்திரா அறிமுகம் செய்தது. இதன்படி, புக்கிங் செய்பவர்களின் பெயர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து எக்ஸ்யூவி டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிவித்தது.

குலுக்கலில் தேர்வு பெறாதவர்களுக்கு முன்பணம் வாபஸ் தரப்படும் என்று அறிவித்தது. இதன்படியே, எல்லாம் நடந்தேறியது. முன்பதிவு செய்த 25,000பேரில் 8000 பேர் மட்டும் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டு எக்ஸ்யூவி 500வை டெலிவிரி கொடுத்து வருகிறது மஹிந்திரா.
இந்த நிலையில், எக்ஸ்யூவிக்கு புக்கிங் செய்து குலுக்கலில் தேர்வு பெறாத வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், குலுக்கலில் தேர்வு பெறாதவர்களிடம் மட்டும் மஹிந்திரா ரகசியமாக புக்கிங்கை பெற்று வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
மேலும், அடுத்த லாட்டில் புக்கிங் செய்பவர்களுக்கு எக்ஸ்யூவி 500 டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் மஹிந்திரா உறுதியளித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், புதிய எக்ஸ்யூவிக்கு புக்கிங் செய்தாலும் நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய நிலையையும் டீலர் வட்டாரங்கள் விளக்கி கூறிய பின்னரே புக்கிங் செய்யப்படுகிறதாம்.


Click it and Unblock the Notifications








