தீபாவளிக்கு முன் சாங்யாங் ரெக்ஸ்டன் அறிமுகம்: மஹிந்திரா திட்டம்

கடந்த ஆண்டு எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்ற தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை மஹிந்திரா கையகப்படுத்தியது. இதையடுத்து, சாங்யாங் தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டது.
முதலில் சாங்யாங் நிறுவனத்தின் கொரண்டூ காம்பெக்ட் பிரிமியம் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவியை முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இந்த எஸ்யூவி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தீபாவளிக்கு முன்னதாக ரெக்ஸ்டன் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ரெக்ஸ்டன் பிரிமியம் எஸ்யூவியில் 2.7 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டாப் வேரியண்ட், மெர்சிடிஸ் பென்ஸ் 5 ஸ்பீட் டி டிரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். பிற வேரியண்ட்கள் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.
கொரியாவிலுள்ள சாங்யாங் ஆலையிலிருந்து உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து மஹிந்திரா ஆலையில் இந்த புதிய எஸ்யூவி அசெம்பிள் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவியில் ஏராளமான சொகுசு மற்றும் பாதுகாப்பு வசதிகள் இருக்கும். டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட பிரிமியம் ரக எஸ்யூவி கார்களுக்கு இது போட்டியாக வரும் என்று கூறலாம்.


Click it and Unblock the Notifications








