சென்னையில் மஹிந்திராவின் பிரம்மாண்ட கார் ஆராய்ச்சி மையம் திறப்பு

இந்தியாவின் முன்னோடி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் மஹிந்திரா தனது வர்த்தக விரிவாக்கத்தை உலக அளவில் விரிவுப்படுத்தி வருகிறது.
இதற்காக, சென்னையில் உள்ள தனது ஆராய்ச்சி மையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தி விரிவுப்படுத்தியிருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த பிரம்மாண்ட வாகன ஆராய்ச்சி மையத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் திறந்து வைத்தார்.
மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
கார், டிராக்டர் ஆகிய அனைத்து வாகனங்களையும் வடிவமைக்கும் பணிகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் செயல்படும் வகையில் இந்த ஆராய்ச்சி மையத்தை மஹிந்திரா கட்டியுள்ளது.
இளநிலை முதல் மூத்த வடிவமைப்பு நிபுணர்கள் வரை இந்த ஆராய்ச்சி மையத்தில்தான் பணிபுரிகின்றனர். தற்போது 1,500 பேர் பணிபுரியும் இந்த ஆராய்ச்சி மையத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையை விரைவில் 3,000ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது மஹிந்திரா.
சென்னை மஹிந்திரா வேர்ல்டு சிட்டியில் 125 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி மையம் மஹிந்திராவின் கார் மற்றும் இதர வாகனங்களை வடிவமைக்கும் முக்கிய பொறுப்பை ஏற்று செயல்படும். மேலும், மஹிந்திராவின் சர்வதேச வர்த்தக விரிவாக்கத்திற்கு இந்த ஆராய்ச்சி மையம் முதுகெலும்பாக செயல்படும்.
விற்பனையில் அசத்தி வரும் மஹிந்திராவின் புதிய எஸ்யூவி இந்த ஆராய்ச்சி மையத்தில்தான் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








