குறைந்த வட்டியில் கார் கடன்: ரேவா-ஸ்டேட் பேங்க் ஒப்பந்தம்

இந்தியாவின் ஒரே எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான ரேவா நிறுவனம் தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. ரேவா ஐ என்ற ஒரே ஒரு எலக்ட்ரிக் கார் மாடலை மட்டும் தற்போது அந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த எலக்ட்ரிக் கார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாம் காலிறுதியில் தீபாவளிக்கு முன்னதாக என்எக்ஸ்ஆர் என்ற பெயரில் புதிய எலக்ட்ரிக் காரை ரேவா அறிமுகம் செய்ய இருக்கிறது. 4 பேர் செல்லும் வசதிகொண்ட இந்த புதிய எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேவா-எஸ்பிஐ ஒப்பந்தம்:
புதிய எலக்ட்ரிக் கார் மூலம் பெரிய அளவில் வர்த்தக திட்டங்களை தீட்டியுள்ள ரேவா, தனது மார்க்கெட்டிங் கட்டமைப்பு பணிகளை தற்போது துவங்கியுள்ளது. மேலும், தனது எலக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் எளிய முறையிலும், குறைந்த வட்டி விகிதத்திலும் கடன் பெறும் வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் ரேவா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த தகவலை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆர்.என்.மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
ஆன்ரோடு விலையில் 85 சதவீதம் வரை கடன் வசதி:
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ரேவா எலக்ட்ரிக் கார்களின் ஆன் ரோடு விலையில் 85 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் கடன் பெற இயலும். மேலும், ஒரு லட்சத்திற்கு மாதத்திற்கு ரூ.1,765 மட்டும் மாதத்தவணையாக செலுத்தினால் போதுமானது. தவிர, 12 சதவீத வட்டி விகிதத்தில் வாடிக்கையாளர்கள் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீலர் பற்றாக்குறை:
இந்த புதிய கடன் வசதி நிச்சயம் ரேவா பக்கம் வாடிக்கையாளர்களை கவரும் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும், நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட வங்கியான ஸ்டேட் வங்கியுடன் மஹிந்திரா ரேவா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நிலையில், ரேவா நிறுவனம் அந்த அளவிற்கு டீலர் நெட்வொர்க்கை கொண்டிருக்கவில்லை என்பது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டாக கருதப்படுகிறது.
டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்துடன், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தனது எலக்ட்ரிக் கார்கள் குறித்து ரேவா விளம்பரம் செய்தால், மார்க்கெட்டில் நிச்சயம் வரவேற்பு அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








