மஹிந்திரா ரேவா பசுமை ஆலைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம்

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இந்தியாவின் ஒரே நிறுவனமாக திகழும் ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனம் மஹிந்திராவின் கீழ் செயல்பட்டு வருகிறது. மஹிந்திரா கீழ் வந்தவுடன் தற்போது என்எக்ஸ்ஆர் என்ற 4 சீட்டர் எலக்ட்ரிக் காரை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது.
இந்த புதிய கார் தயாரிப்புக்காக பெங்களூரில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிய ஆலையை மஹிந்திரா ரேவா அமைத்துள்ளது. சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பசுமை அம்சங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய ஆலைக்கு தேசிய பசுமை கட்டுமான கவுன்சில்(ஐஜிபிசி) பிளாட்டினம் தரவரிசை கொடுத்து கவுரவித்துள்ளது.
இந்த தரவரிசையை பெறும் முதல் இந்திய கார் ஆலை என்ற பெருமையை பெங்களூர் ரேவா ஆலை பெற்றுள்ளது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில்," அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்துக்கான தீர்வுடன் வாகனங்களை மஹிந்திரா ரேவா தயாரித்து வருகிறது.
நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள மஹிந்திரா ரேவா பசுமை ஆலைக்கு இந்த பெருமைமிக்க அங்கீகாரம் கிடைத்துள்ளது எங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறது. ஆட்டோமொபைல் துறையில் புதிய பரிமாணங்களை எட்டுவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா எப்போதும் முன்னோடியாக இருக்கும்," என்றார்.


Click it and Unblock the Notifications








