வரும் 2015ல் ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம்
இன்னும் 3 ஆண்டுகளில் புதிய ஹைபிரிட் கார்களை அறிமுகப்படுத்த இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா சென்னை அருகே ஒரகடத்தில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட தனது ஆராய்ச்சி மையத்தை நேற்று திறந்தது. இந்த ஆராய்ச்சி மையத்தில் ஹைபிரிட் கார்களை வடிவமைப்பதற்காக ஐரோப்பிய ஆலோசனை நிபுணர் அடங்கிய 14 பேர் கொண்ட வடிவமைப்பு குழுவை மஹிந்திரா அமைத்துள்ளது.

இவர்கள் இரவு பகல் பாராது புதிய ஹைபிரிட் கார்களை வடிவமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2015ம் ஆண்டில் இங்கு வடிவமைக்கப்படும் பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் ஹைபிரிட் கார்களை வெளியுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
ஹைபிரிட் கார்களை வடிவமைப்பதற்காக இதுவரை ரூ.300 கோடியை முதலீடு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட கார்களின் ஹைபிரிட் மாடல்கள் இன்னும் 3 ஆண்டுகளில் மார்க்கெட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்கார்ப்பியோ ஹைபிரிட் காரை மஹிந்திரா பார்வைக்கு வைத்திருந்தது. இதேபோன்று, கடந்த ஜனவரியில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் வெரிட்டோ செடான் காரின் எலக்ட்ரிக் மாடலை காட்சிக்கு வைத்திருந்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








