100 கோடியை மிச்சப்படுத்த எண்ணிய மாருதிக்கு நஷ்டம் 2000 கோடி!

மாருதி ஆலையில் தற்காலிக தொழிலாளர்களாக பணிபுரியும் 5,000 தொழிலாளர்கள் ஆண்டு ஊதிய உயர்வு அறிக்கையில் நிர்ந்தர நிலைக்கு மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. இதுபோன்று, தற்காலிக தொழிலாளர்கள் மாற்றப்படும்போது அவர்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 80 முதல் 100 கோடி வரை கூடுதலாக வழங்க வேண்டியிருக்கும்.
ஆனால், மாருதி இதில் 75 சதவீத தொழிலாளர்களை மட்டும் தற்போது நிரந்தர நிலைக்கு மாற்றுவதற்கு உத்தேசித்திருந்தாக தெரிகிறது. இதனால், தற்காலிக தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு அது வன்முறை அளவுக்கு கை மீறிவிட்டது.
இந்த வன்முறையால் மாருதிக்கு 2,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொழிலாளர் பிரச்னையால் உற்பத்தி பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்துக்கு 2,500 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால், தொழிலாளர் பிரச்னையில் உடனடி தீர்வு காணப்படாததால் தற்போது மீண்டும் அந்த நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து ஐஎச்எஸ் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் தீபேஷ் ரத்தோர் குறிப்பிடுகையில்," ஊதிய உயர்வால் வருவாயில் இழப்பு ஏற்படுவதாக கருதி தொழிலாளர்களை நிர்ந்தர நிலைக்கு மாற்றுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் இருந்துள்ளன. இதுபோன்ற கூடுதல் செலவீனங்கள் தவிர்க்க முடியாதது. அத்தியாவசியமானதும் கூட.
மேலும், ஒரு காருக்கு 1,000 மட்டுமே விலையை அதிகரித்தால் கூட இந்த கூடுதல் செலவை சமாளிக்க முடியும். இது தலைவலியை ஏற்படுத்தும் அளவுக்கான பிரச்னை இல்லை. ஆனால், இதனை மாருதி தலைவலியாக்கிக் கொண்டுவிட்டது.
ஆண்டுக்கு ஒரு மில்லியன் கார்களுக்கு மேல் விற்கும் ஒரு நிறுவனத்தால் 100 கோடி கூலி உயர்வை எளிதாக சமாளிக்க முடியும். இதில், முன்கூட்டியே முடிவு எடுத்திருக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க தொழிலாளர் பிரச்னையை கண்டறிந்து அதற்கு உடனடி தீர்வு காணும் நிலையில் இருக்கும் மாருதி இன்னமும் இந்த பிரச்னைக்கான காரணமே தெரியவில்லை என்று கூறி வருகிறது. மானேசர் வன்முறை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின்(எஸஐடி) அறிக்கை வந்தபின்னரே தொழிலாளர் வன்முறைக்கு உண்மையான காரணம் தெரிய வரும். அதை வைத்தே தீர்வு காண முடியும் என்று கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








