மானேசர் ஆலையில் வாஸ்து பிரச்னையாம்.. ஜோசியரை கூப்பிட்ட மாருதி!

மானேசர் ஆலை மூலம் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது மாருதி. ஒருபக்கம் தொழிலாளர் பிரச்னை, உற்பத்தி இழப்பு, வருவாய் இழப்பு மறுபுறம் வாடிக்கையாளர்களின் நெருக்கடி என மானேசர் ஆலையால் நாலாபுறமும் இருந்து மாருதி நெருக்கடிகளை அனுபவித்து வருகிறது.
இதன் உச்சமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மானேசர் ஆலையில் பயங்கர வன்முறை நிகழ்ந்தது. இதில், ஒரு அதிகாரியே காவு வாங்கப்பட்டார். இந்த நிலையில், மானேசர் ஆலையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் பிரச்னைக்கு வாஸ்து பிரச்னை காரணமாக இருப்பதாக அந்த நிறுவனம் கருதுகிறது.
மேலும், ஆலையின் முக்கிய உற்பத்தி பிரிவு அமைந்துள்ள இடம் முன்பு மாயானமாக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும், அந்த ஆலை அமைந்திருக்கும் பகுதியில் இருந்த 3 கோயில்களை இடித்துவிட்டுதான் ஆலை கட்டப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதனால்தான், அங்கு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக மாருதி நம்புகிறது.
இதற்காக, பெங்களூரை சேர்ந்த பிரபல வாஸ்து நிபுணர் கே.என்.சோமயாஜியை மாருதி நிர்வாகம் வரவழைத்துள்ளது. அவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் 600 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள அந்த ஆலையில் ஆய்வு செய்து வருகிறார். அவர் கூறும் ஆலோசனையின் பேரில் மானேசர் ஆலையில் மாற்றங்களை செய்யவும் மாருதி திட்டமிட்டுள்ளது.
இதனை சோமயாஜி செய்தி நிறுவனம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், மானேசர் ஆலை பிரச்னை குர்கான் ஆலையிலும் ஏற்படாமல் தவிர்க்க சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து மாருதி எந்த வித தகவல்களையும் உறுதிப்படுத்தவி்ல்லை.


Click it and Unblock the Notifications








