புதிய டீசல் மாடல்களை களமிறக்க மாருதி தீவிரம்

கார் மார்க்கெட்டில் 40 சதவீதத்திற்கும் மேல் பங்களிப்பை மாருதி பெற்றிருக்கிறது. பல்வேறு பிரச்னைகளால் மாருதியின் மார்க்கெட் பங்களிப்பு சரிந்து வருகிறது. இதனை சரிக்கட்டவும், மார்க்கெட் தேவையை உணர்ந்து செயல்படும் வகையிலும் டீசல் கார்களுக்கு அந்த நிறுவனம் அதிக முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது.
மானேசரில் இருக்கும் இரண்டு ஆலைகளில் ஆண்டுக்கு 3 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்ய முடியும். இந்தநிலையில், மானேசரில் அமைய இருக்கும் புதிய எஞ்சின் ஆலைகள் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2014க்குள் ஆண்டுக்கு 7 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் வகையில் தனது டீசல் எஞ்சின் உற்பத்தி திறனை அதிகரிக்க மாருதி முடிவு செய்துள்ளது. மாருதியின் தலைவர் ஆர்.சி.பர்கவா இதனை நேற்று நடந்த ஆண்டு கூட்டத்தில் தெரிவித்தார்.
ரிட்ஸ், ஸ்விப்ட், எஸ்எக்ஸ்4, எர்டிகா உள்ளிட்ட கார்கள் டீசல் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பிற கார் மாடல்களான ஆல்ட்டோ, வேகன்-ஆர் ஆகிய சிறிய கார்கள் பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆல்ட்டோ, வேகன்-ஆர் கார்களின் டீசல் மாடலை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் விற்பனை தாறுமாறாக உயர வாய்ப்பிருக்கிறது. இதற்காக, சிறிய ரக டீசல் எஞ்சினை வடிவமைக்கும் பணிகளில் மாருதி தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. புதிய டீசல் எஞ்சின் 800சிசி திறன் கொண்டதாக இருக்கலாம் என்றும் அந்த தகவல் கூறுகிறது.


Click it and Unblock the Notifications