டிசையர் உற்பத்தி பாதிப்பு: அவசரமாக இறங்கும் 6 புதிய செடான் கார்கள்!

வன்முறை சம்பவத்தால் மாருதியின் மானேசர் கார் ஆலை மூடப்பட்டிருக்கிறது. இதனால், மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இப்போதைக்கு உற்பத்தி துவங்கும் சூழ்நிலையும் இல்லை. இதனால், அடுத்த இரு மாதங்களுக்கு டிசையர் கார் டெலிவிரி இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்ள முன்னணி கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
பண்டிகை காலத்தில் புதிய கார் மாடல்களை களமிறக்க முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், டிசையர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக திட்டமிட்டதற்கு முன்கூட்டியே தங்களது கார் மாடல்களை அறிமுகம் செய்ய பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அந்த வரிசையில், டிசையருக்கு போட்டியாக ரினால்ட் ஸ்கேலா, டாடா இண்டிகோ மான்ஸா சிஎஸ், செவர்லே செயில், மஹிந்திரா வெரி்டடோ சிஎஸ், 4 மீட்டருக்கும் குறைவான புதிய அம்பாசடர் மற்றும் புதிய ஃபோர்டு ஃபியஸ்ட்டா உள்ளிட்ட 6 புதிய செடான் கார்கள் அடுத்த ஓரிரு வாரங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன.
இதுதவிர, ஏற்கனவெ மார்க்கெட்டில் இருக்கும் தங்களது மாடல்களின் விற்பனையை அதிகரிக்க முன்னணி நிறுவனங்கள் தீவிரமான திட்டங்களுடன் களமிறங்கி இருக்கின்றன. எனவே, பண்டிகை காலத்தில் டிசையர் விற்பனையை பங்குபோட அனைத்து நிறுவனங்களும் பல்வேறு திட்டங்களுடன் களமிறங்கிவிட்டன.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 58,371 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளன. இது கார் மார்க்கெட்டில் 10 சதவீத பங்களிப்பாக கூறப்படுகிறது. மேலும், டொயோட்டா எட்டியோஸ் காரின் விற்பனையை விட(15,556) 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








