ஸ்விப்ட் கதையான எர்டிகாவின் காத்திருப்பு காலம்: வாடிக்கையாளர் அதிருப்தி

கடந்த ஏப்ரலில் வந்த மாருதி எர்டிகாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புக்கிங் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெலிவிரி பெறுவதற்கான காத்திருப்பு காலமும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், எர்டிகாவின் டாப் வேரியண்ட்டின் காத்திருப்பு காலம் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற கார்களில் பேஸ் வேரியண்ட் மற்றும் மிட் வேரியண்ட்தான் அதிகமாக விற்பனையாகும்.
ஆனால், எர்டிகாவின் நிலைமை தலைகீழாக உள்ளது. எர்டிகாவின் விடிஐ மற்றும் விஎக்ஸ்ஐ மிட் வேரியண்ட்டுக்கும், டாப் வேரியண்ட்டுக்கும் ரூ.60,000 வித்தியாசம் இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் ஏராளமான கூடுதல் அம்சங்கள் கொண்ட டாப் வேரியண்ட்டை புக்கிங் செய்கின்றனர்.
இதனால், எர்டிகாவின் டாப் வேரியண்ட் காரை டெலிவிரி பெறுவதற்கான காத்திருப்பு காலம் பெட்ரோல் மாடலுக்கு 6 மாதங்களும், டீசல் மாடலுக்கு கால நிர்ணயம் இல்லாத அளவுக்கும் நிலைமை சென்றுள்ளதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
ஆனால், இந்த செய்தியை மாருதி நிர்வாகம் மறுத்துவிட்டது. அதேவேளை, டாப் வேரியண்ட் எர்டிகாவுக்கான அலாய் வீல் பற்றாக்குறையால் காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், எர்டிகாவின் மிட் வேரியண்ட்டை புக்கிங் செய்து கொண்டு அலாய் வீலை தனியாக வாங்கி கொள்ளுங்கள் என்று டீலர்களில் யோசனை கூறுகிறார்களாம்.


Click it and Unblock the Notifications