75 % ஊதிய உயர்வு கொடுத்து தொழிலாளர்களை திக்குமுக்காட செய்த மாருதி!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி தொழிலாளர்கள் பிரச்னையில் அவ்வப்போது சிக்கி திண்டாடி வருகிறது. குறிப்பாக, ஊதிய பிரச்னைதான் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஆணி வேராக இருந்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த மூன்றாண்டுகளுக்கான ஊதிய நிர்ணய திட்டத்தின்படி, குர்கான் ஆலை தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் ஊதிய உயர்வை வழங்கியிருக்கிறது மாருதி. சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ரூ.18,000 வரை ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பணி மூப்பு அடிப்படையில் தொழிலாளர்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.22,000 வரை மாத சம்பளத்தில் உயர்வு கிடைக்கும். இதுதவிர, புதிதாக பணியில் சேரும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளாக இருந்த திறன் கண்டறியும் காலம் தற்போது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மருத்துவ படியை இரு மடங்கு உயர்த்தியிருக்கும் மாருதி புதிதாக தொழிலாளர்களுக்கு பயணப் படியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, மாதத்திற்கு 1,200 ரூபாய் பயணப்படி கிடைக்கும். தவிர, 20,000 வட்டியில்லா கடன் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
மாருதியின் புதிய ஊதிய ஒப்பந்த திட்ட அறிவிப்பு குர்கான் ஆலை தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து குர்கான் ஆலையில் செயல்பட்டு வரும் மாருதி உத்யோக் காம்கர் தொழிற்சங்கத்தின் செயலாளர் குல்தீப் ஜங்க் கூறுகையில்," கடந்த 2009ம் ஆண்டு ஊதிய நிர்ணய ஒப்பந்தத்தின்போது 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 75 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.
மாருதியின் 30 ஆண்டு கால வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஊதிய உயர்வாக இருக்கும். இது தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது," என்று கூறினார்.
இந்த புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி, குர்கான் ஆலையில் பணிபுரியும் 2032 நிரந்தர தொழிலாளர்கள் பலன் பெறுவர். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. எனவே, ஊதிய நிலுவை தொகையை அக்டோபர் மற்றும் நவம்பர் மாத ஊதியத்துடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று மாருதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஸ்டிரைக் வராம இருந்தா சரி..!!


Click it and Unblock the Notifications