புதிய டீசல் கார்களை களமிறக்க மாருதி, ஹூண்டாய் திட்டம்

கடந்த ஆண்டு முதல் பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களுக்கு மவுசு கூடியிருக்கிறது. எதிர்பாராத வகையில் டீசல் கார் விற்பனை சூடுபிடித்துள்ளதால் அனைத்து கார் நிறுவனங்களும் டீசல் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டின் அதிகம் கார் விற்பனை செய்யும் நிறுவனங்களான மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களின் ஆரம்ப நிலை கார்களில் டீசல் எஞ்சி்ன் இல்லை. இதனால், அவற்றின் விற்பனை வேகமாக சரிந்து வருகிறது.
இதையடுத்து, ஆல்ட்டோ, வேகன்-ஆர் ஆகிய கார்களில் டீசல் எஞ்சின் பொருத்தி விற்பனை செய்ய மாருதி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று, கார் விற்பனையில் இரண்டாம் இடத்திலுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் ஐ-10 காரில் டீசல் எஞ்சின் பொருத்தி விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக, பெரும் முதலீட்டில் டீசல் எஞ்சின் தொழிற்சாலைகளை அமைக்க இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. ஆண்டுக்கு 1.5 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய ஆலையை கட்ட மாருதி திட்டமிட்டுள்ளது.
இதேபோன்று, ரூ.500 கோடி முதலீட்டில் புதிய எஞ்சின் ஆலை கட்டுவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட திட்டமிட்டுள்ள இந்த ஆலையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications