அடுத்த மாதம் குட்டி ஸ்விப்ட் டிசையர் அறிமுகம்: மாருதி தகவல்

கடந்த 2008ம் ஆண்டு என்ட்ரி லெவல் செடான் ரகத்தில் ஸ்விப்ட் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட் டிசையரை மாருதி அறிமுகப்படுத்தியது. தாராள இடவசதி, அழகிய வடிவமைப்பு, அதிக மைலேஜ் உள்ளிட்ட அம்சங்களால் மாருதி ஸ்விப்ட் டிசையர் வாடிக்கையாளர் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், வரிச்சலுகை பெறும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய டிசையர் காரை மாருதி வடிவமைத்துள்ளது. புதிய பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள டிசையருக்கு 10 சதவீதம் வரிச்சலுகை கிடைக்கும் என்பதால் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலைவிட குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.
மேலும், போக்குவரத்து நெரிசல்களில் ஓட்டுவதற்கும் சுலபமாக இருக்கும் என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் ஸ்விப்ட் டிசையர் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைமை பொது மேலாளர் சஷாங் வத்சவா கூறியதாவது:
அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெல்லியில் புதிய ஸ்விப்ட் டிசையர் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். புதிய பிளாட்பார்மில் இந்த டிசையர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்விப்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் மாடல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதற்காக, ரூ.230 கோடி முதலீடு செய்துள்ளோம். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலைவிட 150 கூடுதல் அம்சங்கள் புதிய டிசையரில் இருக்கும்.
மேலும், புதிய டிசையர் அறிமுகம் செய்யப்பட்டவுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அதிக நீளம் கொண்ட டிசையரும் விற்பனை செய்யப்படும். ஆனால், மிட் மற்றும் டாப் வேரியண்ட்கள் விற்பனை நிறுத்தப்படும்," என்றார்.
புதிய ஸ்விப்ட் டிசையர் ரூ.4.94 லட்சம் முதல் ரூ.7.29 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








