மாருதியின் மானேசர் ஆலை இரண்டாவது நாளாக மூடல்: கார் உற்பத்தி பாதிப்பு

ஹரியானா மாநிலம், மானேசரில் இயங்கி வரும் மாருதி ஆலையில் நேற்றுமுன்தினம் பயங்கர மோதல் நிகழ்ந்தது. இந்த மோதலில் அலுவலகங்களை அடித்து நொறுக்கி அலுவலங்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படு்ததியுள்ள இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக 99 தொழிலாளர்களை கைது செய்தனர். இந்த நிலையில், சம்பவத்தில் தீயில் கருகி பலியானவர் மாருதியின் மூத்த அதிகாரி என்று தெரிய வந்துள்ளது.
மனிதவளத் துறையில் பொதுமேலாளராக பணிபுரிந்து அவனீஷ் குமார் தேவ்தான் தீயில் கருகி பலியானது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவையும்(சிஐடி) ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைத்துள்ளது. சம்பவத்துக்கு காரணமான தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், மானேசர் ஆலையில் 3,000 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலை தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மாருதி செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மானேசர் ஆலை தொடர்நது இரண்டாவது நாளாக மூடப்பட்டிருப்பதால், கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில்தான் மாருதியின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








