மைலேஜ் குறித்து தவறான தகவல்: மாருதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

டெல்லி, ரோஹிணி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் சர்மா. கடந்த 2005ம் ஆண்டு மாருதி ஸென் எல்எக்ஸ் காரை வாங்கினார். மாருதி நிறுவனம் அளித்த விளம்பரத்தில் அந்த கார் லிட்டருக்கு 16.7 கிமீ மைலேஜ் தரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிக மைலேஜ் கொடுப்பதாக மாருதி நிறுவனம் விளம்பரத்தில் கொடுத்திருந்த உத்தரவாதத்தை நம்பி அந்த காரை அவர் வாங்கியிருக்கிறார்.
ஆனால், அந்த கார் அதிக மைலேஜ் கொடுக்கவில்லை. மாறாக லிட்டருக்கு 10.2 கிமீ மட்டுமே மைலேஜ் கொடுத்தது. இதனால், அதிருப்தியடைந்த அவர் டெல்லி மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தார். அதில், தன்னை மாருதி ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து நீதிபதி சி.கே.சதுர்வேதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது, பிரபல ஆங்கில இதழ் ஒன்று சோதனை நடத்தி அளித்த விபரங்களின் அடிப்பைடியிலேயே அந்த மைலேஜ் விபரங்களை விளம்பரங்களில் கொடுத்ததாக மாருதி நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. விளம்பரத்தில் கண்ணுக்குத் தெரியாத வகையில் அந்த விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளருக்கு தவறான தகவல் அளித்த மாருதி நிறுவனம் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமான வாடிக்கையாளர்கள் கார் வாங்கியிருக்க வாய்ப்புள்ளது. இதனால், மாருதி நிறுவனத்துக்குத்தான் லாபம் கிடைத்திருக்கும். எனவே, எதிர்காலத்தில் மாருதி நிறுவனம் கார்களை சொந்தமாக சோதனை நடத்தி குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச மைலேஜ் விபரங்களை வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டும், என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறினர்.


Click it and Unblock the Notifications