ஒரு மாதத்திற்கு பின் மாருதி ஆலையில் கார் உற்பத்தி துவங்கியது

500 நிரந்தர தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று 300 தொழிலாளர்களுடன் காலை 8 மணிமுதல் மாலை 4.30 மணி வரை ஒரு ஷிப்டில் மட்டும் உற்பத்தி நடைபெறுகிறது.
தொழிலாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதற்கு மாருதியின் மற்றொரு ஆலையான குர்கான் ஆலையை சேர்ந்த தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், அங்கு தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
இதனால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு படைப் பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்களை மாருதி பணியமர்த்தியுள்ளது.
முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பிரபலமான தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களும் ஆலையின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர, ஹரியானா அரசும் மாருதி ஆலைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது.போலீசார் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் என மொத்தம் 500 பேர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களை விட அதிக அளவில் போலீசார் தலைதான் ஆலை முழுக்க தெரிகிறது. ஆலை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புடன் இன்று உற்பத்தி நடக்கிறது.
நாள் ஒன்றுக்கு 1700 கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட மாருதி ஆலையில் இன்று முதல் நாள் ஒன்றுக்கு 150 கார்களை மட்டுமே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மானேசர் ஆலை நிர்வாக அதிகாரி சித்திக் தெரிவித்தார்.
மாருதி ஆலையில் கார் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார் முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








