இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் கார் எர்டிகா: மாருதி பெருமிதம்

கார் மார்க்கெட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. 800, ஆல்ட்டோ, ஸ்விப்ட், வேகன்-ஆர், ரிட்ஸ் என அனைத்து கார்களுமே குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு பின் இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டது.
ஆனால், வரும் 12ந் தேதி அறிமுகம் செய்யப்படும் எர்டிகா முற்றிலும் இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் கார் மாடல் என்று மாருதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதியின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு தலைவர் மாயன் பரீக் கூறியதாவது:
"கடந்த 2008ம் ஆண்டு ஜப்பானிலுள்ள சுஸுகி வடிவமைப்பு மையத்தில் எர்டிகா வடிவமைக்கும் பணிகள் துவங்கின. பொதுவாக, நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களும் உலக அளவில் விற்பனை செய்யப்படும் விதத்தில் குளோபல் வடிவமைக்கப்பட்ட கார்கள்தான்.
ஆனால், எர்டிகா மட்டும்தான் முழுக்க முழுக்க இந்திய மார்க்கெட்டுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் மாருதி கார். இந்த காரை வடிவமைக்கும் முன்பு வழக்கம்போல் இந்திய சாலைநிலைகளை மட்டுமில்லாமல், இந்தியர்களின் வாழ்க்கை முறை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை என அனைத்தையும் மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் கார்கள், இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது சிற்சில மாற்றங்கள் செய்து அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால், இது முற்றிலும் 'இண்டியன்' பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட கார் என்பதால் பிற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்," என்றார்.
சுஸுகியின் தாயகமான ஜப்பானில் இந்த கார் விற்பனை செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒரு சில ஆசிய நாடுகளில் எர்டிகாவை விற்பனைக்கு கொண்டு வர மாருதி சுஸுகி கூட்டணி முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








