ரூ.5,000 முன்பணத்துடன் புதிய ஆல்ட்டோ 800 காருக்கு புக்கிங் துவக்கம்

மாருதி 800 மற்றும் ஆல்ட்டோ ஆகிய கார்களுக்கு மாற்றாக ஆல்ட்டோ 800 என்ற பெயரில் புதிய குட்டிக் காரை வரும் அக்டோபர் 16ந் தேதி மாருதி அறிமுகப்படுத்த உள்ளது.
லிட்டருக்கு 22.74 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று, கூடுதல் ஹெட்ரூம், லெக்ரூம், புதிய டிசைன்,முற்றிலும் புதிய உள்ளலங்காரம் என ஏராளமான சிறப்பம்சங்களை தாங்கி வருகிறது புதிய ஆல்ட்டோ 800. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் விற்பனைக்கு வருகிறது.
குறைந்த விலையில் மாருதி அறிமுகப்படுத்தப்போகும் புதிய கார் என்பதால், இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், புதிய ஆல்ட்டோ 800 காருக்கு முன்பதிவை துவங்கியிருக்கிறது மாருதி. ரூ.5,000 முன்பணம் பெற்றுக்கொண்டு புதிய ஆல்ட்டோ 800 காருக்கு ஷோரூம்களிலும், ஆன்லைனிலும் முன்பதிவு செய்யப்படுகிறது.
ஒருவேளை, கார் அறிமுகமான பின் வாடிக்கையாளர்கள் முன்பதிவை ரத்து செய்தாலும் கூட ரூ.5,000 முன்பணத்தையும் முழுவதுமாக திரும்ப வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்பதிவு துவங்கியிருப்பதால் இந்த காரின் உற்பத்தியும் முழு வீச்சில் துவங்கப்பட்டு விட்டதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரின் அறிமுக தேதியை மாருதி இதுவரை வெளியிடாவிட்டாலும் அக்டோபர் 16ந் தேதி அறிமுகமாவது முன்பதிவு துவங்கியிருப்பதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








