அதிக நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் வரிசையிலும் மாருதிக்கு முதலிடம்

வாடிக்கையாளர் மத்தியில் விரும்பப்படும் மற்றும் அதிக நம்பிக்கையை பெற்ற ஆட்டோ நிறுவனங்கள் குறித்து பிராண்டு டிரஸ்ட் அட்வைசரி என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.
வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவை மற்றும் நிறுவனத்தின் உற்பத்தி தரம், விலை நிர்ணயம் உள்ளிட்ட ஏராளமானவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில், நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம்தான் அதிக நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் வரிசையிலும் முதலிடத்தை பெற்றுள்ளது.
வாடிக்கையாளர் மத்தியில் அதிகம் விரும்பப்படும் நிறுவனமாகவும், முன்னுரிமை பெற்ற நிறுவனமாகவும், கார் விற்பனைக்கு பிறகு சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குவதிலும் மாருதி முதலிடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, அதிக நம்பிக்கைக்குரிய ஆட்டோ நிறுவனமாக மாருதியை பிராண்டு டிரஸ்ட் நிறுவனம் தேர்வு செய்து அறிவித்துள்ளது. மேலும், அதிக நம்பிக்கைக்குரிய கார் மாடல் என்ற பெருமையை மாருதியின் ஸ்விப்ட் டிசையர் கார் பெற்றுள்ளது.
மேலும், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் முதன்முதலில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் நிறுவனம் என்ற பெருமையும் மாருதிக்கு கிட்டியுள்ளது. இதுதவிர, குறைந்த செலவில் கார் சர்வீஸ் மற்றும் குறைந்த விலையில் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலிலும் மாருதிதான் நம்பர் ஒன்.
மாருதியை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ, ஹீரோ ஹோண்டா, ஹோண்டா மற்றும் டொயோட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிக நம்பிக்கைகுரிய நிறுவனங்கள் பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
அதிக நம்பிக்கைக்குரிய ஆட்டோ நிறுவனங்கள் பட்டியலில் ஃபோர்டு, ஆடி, ஹீரோ, யமஹா மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், கார் உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








