புதிய டீசல் கார் மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி முடிவு

மார்க்கெட் லீடரான மாருதிக்கு கடந்த ஆண்டு சோதனையாகவே அமைந்தது. தொழிலாளர் வேலைநிறுத்தம், பெட்ரோல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மாருதியின் கார் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது.
மேலும், வெளிநாட்டு கார் நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்துவதும் மாருதிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, பெட்ரோல் விலை தொடர்ந்து எகிறி வருவதால் டீசல் கார்கள் பக்கம் வாடிக்கையாளர் கவனம் திரும்பியுள்ளது. இதனால், புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்த மாருதி முடிவு செய்துள்ளது.
மாருதிக்கு சிறிய கார் மார்க்கெட்தான் அஸ்திவாரம். ஆனால், மாருதியின் சிறிய கார்கள் அனைத்தும் பெட்ரோல் மாடல்களிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனால், தனது விற்பனை சரிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதை மாருதி உணர்ந்துகொண்டுள்ளது. எனவே, புதிய டீசல் கார்களை அறிமுகப்படுத்தி தனது மார்க்கெட்டை வலுப்படுத்திக்கொள்ள மாருதி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாருதி நிர்வாக இயக்குனர் சின்ஷோ நகனிஷி கூறுகையில்,"எங்களது ஸ்விப்ட், ரிட்ஸ் மாடல்களில் 80 சதவீதம் அளவுக்கு டீசல் மாடல்களே புக்கிங் செய்யப்படுகின்றன. எனவே, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை உணர்ந்து டீசல் மாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம்," என்று கூறினார்.
தற்போது ஆண்டுக்கு 3 லட்சம் டீசல் எஞ்சின்களை உற்பத்தி செய்யும் திறனை மாருதி பெற்றுள்ளது.மேலும், ஃபியட் நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு ஒரு லட்சம் டீசல் எஞ்சின்களை பெறவும் மாருதி சமீபத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
ஆல்ட்டோ, வேகன்-ஆர், ஸென் எஸ்டீலோ ஆகிய மாடல்களில் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








