6 புதிய மாடல்கள்; 400 கோடி முதலீடு: அதிரடியாக இறங்கும் பென்ஸ்
அடுத்தடுத்து 6 புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக 400 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
ஆடி, பிஎம்டபிள்யூ போட்டியை சமாளிக்க முடியாமல் சொகுசு கார் மார்க்கெட்டில் படிப்படியாக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது பென்ஸ். தற்போது சுதாரித்துக் கொண்டு முதலிடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ஏ(ஹேட்ச்பேக் கார்), பி(ஹேட்ச்பேக்), சிஎல்ஏ (எஸ்யூவி)மற்றும் ஜிஎல்ஏ(சிறிய செடான்) ஆகிய சொகுசு கார் மாடல்களை அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதில், பி கிளாஸ் கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபரில் விற்பனைக்கு வந்துவிடும். மீதமுள்ள மாடல்களை அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வர பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
புதிய மாடல்கள் வந்தால் உற்பத்தி திறன் போதாது என்று கருதி, புனேயில் உள்ள அசெம்பிளிங் ஆலையை விரிவாக்க செய்யவும் முடிவெடுத்துள்ளது. ஆலை விரிவாக்கத்திற்காக 400 கோடியை முதலீடு செய்ய உள்ளது. புனே ஆலையில் தற்போது ஆண்டுக்கு 10,000 கார்களை அசெம்பிளிங் செய்ய முடியும். ஆனால், புதிய முதலீடு மூலம் புனே ஆலையின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 30,000 கார்களாக உயரும்.
தற்போது சி கிளாஸ், இ கிளாஸ் மற்றும் எஸ் கிளாஸ் கார்கள் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு புனே ஆலையில் அசெம்பிள் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று, புதிதாக அறிமுகம் செய்யப்படும் கார்களையும் புனே ஆலையில் அசெம்பிளிங் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளது. புதிய மாடல்கள் மற்றும் முதலீடு மூலம் சொகுசு கார் மார்க்கெட்டில் தனது பங்களிப்பு வெகுவாக உயரும் என பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








