பார்முலா-1 பந்தயத்திலிருந்து ஓய்வு பெறுகிறார் மைக்கேல் ஷூமேக்கர்

ஒரு நேரத்தில் பார்முலா-1 பந்தய வீரர்களுக்கு மைக்கேல் ஷூமேக்கர் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். தற்போது 43 வயதாகும் ஷூமேக்கர் மைல்ட் செவன் பெனட்டன் மற்றும் ஃபெராரி அணிகளின் சார்பில் கலந்து கொண்டு 7 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர்.
கடந்த 2006ம் ஆண்டே பார்முலா-1 பந்தயங்களில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், 3 ஆண்டுகள் கழித்து கடந்த 2010ம் ஆண்டு திடீரென மெர்சிடிஸ் பென்ஸ் அணிக்காக 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் மீண்டும் களமிறங்கினார்.
தனது இரண்டாவது இன்னிங்சில் அவர் ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக மைக்கேல் ஷூமேக்கர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," எனது இரண்டாவது இன்னிங்சில் எதிர்பார்த்த அளவு சாதனகளை பதிவு செய்ய முடியவில்லை. அதேவேளை, எனது ஒட்டுமொத்த ரேஸ் வாழ்க்கையில் செய்த சாதனைகள் எனக்கு மனநிறைவு தருகிறது.
என் மீது நம்பிக்கை வைத்த மெர்சிடிஸ் அணி நிர்வாகத்தினர், எஞ்சினியர்கள் மற்றும் மெக்கானிக்குகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். தற்போது எனது கவனம் முழுவதும் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக ரேஸ் ஓட்ட வேண்டும் என்பதுதான்.
பழையபடி தொடர்ந்து ஊக்கமுடனும், புத்துணர்வுடனும் செயல்படுவதில் நடைமுறையில் பல சிரமங்கள் இருக்கின்றன. கடந்த 2006ம் ஆண்டே எனது பேட்டரியில் சார்ஜ்(உடலளவிலும், மனதளவிலும் ஆற்றல் குறைந்துவிட்டதை அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்) தீர்ந்துவிட்டது என்று கூறியிருந்தேன்.
ஆனால், தற்போது எனது பேட்டரியில் சார்ஜ் முழுவதுமாக தீர்ந்து சிவப்பு விளக்கு எரிகிறது. பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கு இனி காலம் இல்லை. எனவே, என் மனது சுதந்திரத்தை நோக்கி செல்கிறது. எனவே, ஓய்வு பெறுவதை சிறந்த வழியாக கருதுகிறேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








