புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தும் மிட்சுபிஷி

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் அம்பாசடர் புகழ் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் கார் விற்பனை செய்து வருகிறது.
இருந்தாலும் போதிய சர்வீஸ் நெட்வொர்க் இல்லாதது, அதிக விலை போன்ற காரணங்களால் இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற முடியாமல் மிட்சுபிஷி தவித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் சிறிய கார்களுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில்க்கொண்டு புத்தம் புதிய ஹேட்ச்பேக் காரை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் டோக்கியோ மோட்டோர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட மிராஜ் ஹேட்ச்பேக் காரைத்தான் இந்தியாவிலும் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
அடுத்த மாதம் மிராஜ் ஹேட்ச்பேக் கார் தாய்லாந்தில் விற்பனைக்கு வருகிறது. இதையடுத்து, மிராஜ் நம் நாட்டுக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தாய்லாந்தில் உள்ள மிட்சுபிஷி ஆலையிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னையிலுள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் இந்த கார் அசெம்பிளிங் செய்ய மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுகுறித்து மிட்சுபிஷி மசாஹிகோ உகி கூறியதாவது:
"இந்திய மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறோம். சிறிய காரை விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் இருக்கிறது.
அதுகுறித்து சாதக பாதக அம்சங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். தவிர, இந்தியாவில் சிறிய காரை விற்பனைக்கு கொண்டு வந்தால் போதிய டீலர் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன் வசதிகள் தேவை. அதை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
இதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது," என்று கூறினார்.
இந்த புதிய கார் மாருதி ஸ்விப்ட், ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








