தி நகரில் பிரம்மாண்ட அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் - 500 கார்கள் நிறுத்தலாம்!!

சென்னையின் முக்கிய வியாபார ஸ்தலமாக விளங்கும் தியாகராய நகரில் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னை மட்டுமின்றி, வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வரும் மக்கள்தி நகரில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
இதனால், அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும், வாகனங்களில் வருவோருக்கு அங்கு பார்க்கிங் செய்வது பெரும் பிரச்னையாக இருக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பாஷ்யம் சாலையில் பனகல் பூங்காவுக்கு அருகில் பிரம்மாண்டமான பல அடுக்கு கார் நிறுத்தும் வளாகம் கட்டப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. இதற்கான டெண்டர் அடுத்த வாரம் விடப்படுகிறது. இந்த அடுக்குமாடி பார்க்கிங் வளாகம் 6 முதல் 7 தளங்களை கொண்டதாக கட்டப்பட உள்ளது. இந்த புதிய பார்க்கிங் வளாகத்தில் ஒரே நேரத்தில் 510 கார்களும், 918 இருசக்கர வாகனங்களையும் நிறுத்த முடியும்.
இந்த பார்க்கிங் வளாகத்தில் ஒரு மணிநேரத்துக்கு கார்களை நிறுத்துவதற்கு 30 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும். முதலில் கார்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 40 ரூபாய் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
இது அதிகமாக இருப்பதை உணர்ந்த சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, அதை 30 ரூபாயாக குறைக்குமாறு அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் உள்ளிட்ட வணிக வளாகங்களில் பார்க்கிங் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு 25 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், 30 ரூபாய் கட்டணமே அதிகம் என கருத்து நிலவுகிறது.
இந்த பல அடுக்கு பார்க்கிங் வளாகம், பூமியின் அடியில் 3 தளங்களும், பூமியின் மேலே 3 தளங்களும் கட்டப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார். சிசிடிவி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பில் வழங்கும் வசதிகளும் இந்த புதிய பார்க்கிங் வளாகத்தில் இருக்குமென அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








