செடான் கார் விற்பனையை விஞ்சிய எம்யூவி கார்கள்
நம் நாட்டு கார் மார்க்கெட்டில் முதன்முறையாக செடான் கார் விற்பனையை விஞ்சியிருக்கிறது எம்யூவி கார்களின் விற்பனை.
கடந்த ஆண்டு முதல் யுட்டிலிட்டி ரகத்தை சேர்ந்த கார்களுக்கான வரவேற்பு கூடிக் கொண்டே செல்கிறது. எஸ்யூவி, எம்யூவி, எம்பிவி உள்ளடக்கிய இந்த கார் மார்க்கெட் தற்போது செடான் கார் விற்பனையை விஞ்சி சாதனை படைத்துள்ளது.

ஹேட்ச்பேக் கார்கள் விற்பனைக்கு அடுத்ததாக செடான் கார் விற்பனை இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. இந்த இடத்தை தற்போது யுட்டிலிட்டி ரகத்தை சேர்ந்த கார்கள் பெற்றுள்ளன. மஹிந்திராவின் எக்ஸ்யூவி 500 மற்றும் மாருதி எர்டிகா உள்ளிட்ட புதிய மாடல்களின் வரவால் யுட்டிலிட்டி ரக கார் விற்பனை அசுரத்தனமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்(ஏப்ரல்-ஜூன்) மொத்தம் 9,000 எக்ஸ்யூவி 500 கார்களை விற்பனை செய்துள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. டொயோட்டா 20,000 இன்னோவா கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் டி செக்மென்ட்டில் விற்பனையாகும் செடான் கார்களான டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ், ஹோண்டா சிவிக், செவர்லே குரூஸ், ஸ்கோடா லாரா ஆகிய அனைத்து கார்களையும் சேர்த்து மொத்தம் 6,500 செடான் கார்களே விற்பனையாகியிருக்கிறது.
இதேபோன்று, சி செக்மென்ட்டில் மாருதி எர்டிகா விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏப்ரல்-ஜூன் இடையில் 6,500க்கும் அதிகமான எர்டிகா கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது. ஆனால், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, ஃபோர்டு ஃபியஸ்ட்டா என எந்தவொரு காரும் எர்டிகா எண்ணிக்கையை எட்டி பிடிக்கவில்லை.
பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டிலும் இதே நிலைதான் இருக்கிறது. அங்கேயும் செடான் கார்களை விட எஸ்யூவி கார்களே விற்பனையில் மேலோங்கி நிற்கின்றன. எந்த சாலை நிலையிலும் அச்சப்படாமல் செல்லலாம், அதிகம் பேர் பயணிக்கும் வசதி, மைலேஜ் என எல்லா விதத்திலும் யுட்டிலிட்டி கார்கள் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டிருப்பதே வாடிக்கையாளரின் மனநிலை மாறியதற்கு காரணமாக கார் நிறுவனங்கள் கருதுகின்றன.


Click it and Unblock the Notifications








