புதிய மாடல் நானோ கார்கள் அறிமுகம் செய்யப்படும்: ரத்தன் டாடா

உலகின் மிகக்குறைந்த விலை கார் பட்டத்தை தொடர்ந்து தக்கவைத்து வரும் நானோ கார் பல புதிய அவதாரங்களை எடுத்து வருகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நானோ காரை ஐரோப்பிய மார்க்கெட்டில் பிக்ஸல் என்ற பெயரில் டாடா விற்பனை செய்ய உள்ளது.
மேலும், கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டீசல் நானோ அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்க்ப்பட்டது. ஆனால், சிஎன்ஜியில் இயங்கும் நானோ காரை டாடா மோட்டார்ஸ் காட்சிக்கு வைத்திருந்தது.
இதனால், ஆட்டோமொபைல் துறையினருக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், டீசல், எலக்ட்ரிக் உள்பட பல புதிய நானோ கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.
தற்போது பெட்ரோல் மாடலில் மட்டுமே நானோ கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிஎன்ஜி, டீசல் மற்றும் எலக்ட்ரிக் மாடல் நானோ கார்களையும் விற்பனைக்கு கொண்டு வருகிறது டாடா. இதன்மூலம், நானோவின் விற்பனை நல்ல வளர்ச்சி பெறும் என்று டாடா நம்புகிறது.
ஆனால், புதிய நானோ கார் மாடல்களுக்கான காலக்கெடு குறித்து ரத்தன் டாடா கருத்து கூற மறுத்துவிட்டார். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நானோ காரின் புதிய மாடல்களை சாலைகளில் பார்க்கலாம் என்று எதிர்பார்க்க்பபடுகிறது.


Click it and Unblock the Notifications








