பஜாஜ் குட்டி கார் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை: நிசான்

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஆர்இ60 என்ற நான்கு சக்கர பயணிகள் வாகனத்தை வடிவமைத்துள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய குட்டி வாகனத்தை பார்வைக்கு வைத்திருந்தது.
ஆட்டோரிக்ஷாவுக்கு மாற்றாக இருக்கும் வகையிலான அம்சங்களுடன் இந்த புதிய பயணிகள் வாகனத்தை பஜாஜ் ஆட்டோ வடிவமைத்துள்ளது. 200சிசி எஞ்சின் கொண்ட இந்த பயணிகள் வாகனம் லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த பயணிகள் வாகனத்தை ரினால்ட்-நிசான் கூட்டணி நிறுவனங்கள் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை செய்யும் வகையில் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்த்த தரம் மற்றும் வடிவமைப்பு இல்லை என கூறி இந்த கார் திட்டத்திலிருந்து ரினால்ட் விலகியது. மற்றொரு நிறுவனமான நிசானும் அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, சொந்தமாகவே இந்த பயணிகள் வாகனத்தை விற்பனை செய்ய இருப்பதாக பஜாஜ் அறிவித்தது.
இந்த நிலையில், வெளிப்படையாக திடமான முடிவை இதுவரை அறிவிக்காமல் மதில் மேல் பூனையாக இருந்து வரும் நிசான் தற்போது வாய் திறந்துள்ளது. பஜாஜ் பயணிகள் வாகனத்தை விற்பது குறித்து விஷயத்தில் பரிசீலனையில் வைத்திருப்பதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் நிசான் தெரிவித்துள்ளது.
இதனால், பஜாஜ் வடிவமைத்திருக்கும் பயணிகள் வாகனத்தை விற்பனை செய்யும் திட்டம் இன்னமும் நிசான் மனதில் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், பஜாஜின் ஆர்இ60 பயணிகள் வாகனத்தில் சில மாறுதல்களை செய்து விற்பனை செய்யலாமா என நிசான் யோசித்து வருவதாக தெரிகிறது. இந்த காரை ரூ.2 லட்சத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








